Janaki Balakrishnan's article

Janaki Balakrishnan

1 min read

சிறீகுகன் சிறீஸ்கந்தராஜா – செயல் வீரன்

சிறீகுகன் சிறீஸ்கந்தராஜா அவர்களின் இழப்பு என்பதை ஒரு அறிவுக்களஞ்சியம் அழிந்துவிட்டது, ஒரு செயற்பாட்டு வீரனை இழந்துவிட்டோம் என்றுதான் சுருக்கமாகக் கூறலாம். சிறீகுகன் எதில் பங்குபற்றவில்லை, எதில் அவரால் பங்களிக்க முடியவில்லை என்று எண்ணிப்பார்த்தால், எதுவுமே இல்லையென்றுதான் கூறமுடியும். அவரது பங்களிப்பும் செயற்பாடும் பரந்துபட்டது, ஒரு எல்லையில்லாதது. இச்சில பக்கங்களில் அடங்கும் கட்டுரை அவரது பங்களிப்பினை மேலோட்டமாகவே அறியத்தரும். மேற்கொண்டு சிறீகுகன் பற்றியும், அவர் மேற்கொண்ட முயற்சிகள், திட்டங்கள் ஆகியவை பற்றியும் அறிவதானால் அவர் ஈடுபாடாக செயற்பட்ட துறைகளில் ஆராய்ச்சி செய்தே கண்டறியலாம்.

சிறீகுகனை 1984 இலிருந்தே தெரிந்திருந்தாலும், அவரது பங்களிப்புகள் பற்றி அறிந்திருந்தாலும், 1993-94ம் ஆண்டில் சிறீகுகனுடன் செயற்படத் தொடங்கிய விடயங்கள் பற்றியும், அவர் ஈடுபாடாக இயங்கிய விடயங்கள் பற்றியுமே இங்கு தெரியப்படுத்துகிறேன்.

1993-94ம் ஆண்டளவில் அந்நாள் Ontario NDP Employment Equity ஐ சட்டமாக்கி அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. சில சட்டங்கள் பாராளுமன்ற வாக்கெடுப்புடன் மட்டும் அமுலாக்கப்படுகின்றன. சிலவற்றிற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையாக இருக்கும். சிலவற்றை அமுல்படுத்தும்போது அரசு Standing Committee ஒன்றினை நிறுவி அதன் மூலம் பொதுமக்கள், நிறுவனங்கள், சமூகப்பிரதிநிதிகள் ஆகியோரின் அபிப்பிராயங்கள், விருப்பு, வெறுப்புகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து அமுல்படுத்துவார்கள்.

அண்மையில் நண்பரொருவர் தனது முகநூல் பதிவில் 1933 ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் ஒரு மாநாட்டில் சட்டம் இயற்றும் உரிமையைப் பெறுங்கள், அதுவே அனைத்திற்குமான தீர்வை ஏற்படுத்தும் எனும்பாணியில் பேசினார் என்பதை விளக்கமாக எழுதியிருந்தார். சிறீகுகனும் அது போன்ற திடமான நம்பிக்கையில் செயல்பட்ட ஒருவர்தான். சிறீகுகன் சட்டக்கல்வி கற்க இங்கிலாந்து சென்று, பின்பு கனடாவிற்கு வந்தார். அவர் கனடாவில் சட்டத்தரணியாக சேவையாற்றாவிடினும், அவரைப் பலரும் லோயர் என்றே கருதினர், அழைத்தனர். அவரிடம் அதற்கான அறிவும், அனுபவமும், அதற்கும் மேலாகவும் இருந்தது என்றே கூறலாம். அவர் சேவையாற்றிய பதவிகள் சிலவற்றைப் உற்று நோக்கினால், ஒரு நீதிபதிக்கு சமானமான சேவையையே ஆற்றியுள்ளார் எனவும் கருதலாம்.

Employment Equity சட்டமாக்குதலின் போது, Alliance for Employment Equity (AEE) எனும் தன்னார்வ நிறுவனமொன்று அதுபற்றிய செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டது. அக்காலத்தில்தான், ஈழத்தமிழர் பலரில் நன்கு தகுதி பெற்றோரும், அனுபவம் வாய்ந்தோரும் புலம்பெயர்ந்து வந்து, தகுந்த தொழில் வாய்ப்புகளின்றி அலைந்த காலங்கள். உடலுழைப்பு தேவையான வேலைகள், இரவு தூக்கத்தை இழக்க வேண்டிய தொழில்கள் போன்ற பிரத்தியேக கம்பனிகள் சார்ந்த தொழில்கள் தவிர்ந்த அதிகமான ஏனைய தொழில்வாய்ப்புகள் அனைத்தும், குறிப்பாக அரச தொழில்கள், able bodies வெள்ளை நிறத்தவருக்கும், ஊதியம் கூடிய தொழில்கள் வெள்ளைநிற ஆண்களுக்குமே கிடைத்த காலம். இப்போதும் நிலைமை முற்றாக மாறவில்லை. எம்போல் நிறத்தவரான சிறுபான்மையினருக்கும், ஆதிகுடியினருக்கும், disable group ஐ சேர்ந்தவருக்கும், ஒருபால் சேர்க்கையினருக்கும், ஏன் பெரும்பாலான பெண்களுக்கும் அந்த system நுழைவதற்கு சவாலாக இருந்தது என்பதைவிட, discrimination, systemic racism அனைத்தும் வேண்டுமென்றே தடுப்பை (barrier ஐ) ஏற்படுத்தி வைத்திருந்தது. Employment Equity மூலம் வேலைத்தளங்களில் சமநிலையை ஏற்படுத்தலாமென அன்றைய ஒன்ராறியோ அரசு திடமான நம்பிக்கையுடன் அச்சட்டத்தை அமுலாக்கம் செய்ய முன்வந்தது. சிறீகுகனும் அது சரியான சட்டமென பரிசீலித்தறிந்து Alliance for Employment Equity எனும் தன்னார்வ நிறுவனத்துடன் ஒரு தொண்டராக செயற்பட்டார். Standing Committee க்கு submission செய்ய நானும் முன்வந்தேன். அவ்வேளையில் சிறீகுகன் எம்போன்றவர்களின் submission ஐ வாசித்து கருத்துகள் தெரிவித்து, திருத்தங்கள் செய்து கொடுத்தார். சில கருத்தரங்குகளில் பங்குபற்றினார். அதிகம் ஆதரவு அளிக்கும் சமர்ப்பணங்கள் கிடைக்கப்பெற்று சட்டம் அமுலாக்கம் பெற்றது. ஆனால் அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கொன்சவேட்டிவ் அரசு, முதல் வேலையாக அச்சட்டத்தை அகற்றியது. அப்போதும் அச்சட்டத்தை அகற்ற வேண்டாமென பலர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்து தருவதில் சிறீகுகன் முன்னின்றார்.

அதேகாலத்தில்தான், அதாவது ஆரம்ப 1993 களில் சிறீகுகன் அன்றைய NDP அரசினால் நிறுவப்பட்ட Commission on Systematic Racism in the Ontario Criminal Justice Systme எனும் நிறுவனத்தின் Commissioner ஆக கடமையாற்றினார். இப்பதவியில் இருந்தபோது ஒரு அறிக்கை வெளியிடுவதற்குப் பொறுப்பாக இருந்தார். வெளியிடப்பட்ட அறிக்கையில் அவரும், அவரது சகாக்களும் ஒன்ராறியோ சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்து, அதன் நிலைமைகளைப் பற்றியும் அறிக்கையில் தெரியப்படுத்தினார்கள். ஓன்ராறியோ சிறைச்சாலைகள் அதிகமாக ஆதிகுடியினராலும், People of colour. அதிகமாக கறுப்பின மக்களாலும் நிறைந்திருந்ததையும், சிறைச்சாலையிலும் கூட இவர்கள் வன்முறைக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளானது பற்றியும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பரந்துபட்டு, பல இனங்களுக்கும் நடக்கக்கூடிய அநீதிகளையும் நன்கறிந்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் எம்மில் பலரைப் போலில்லாமல் ஏற்கனவே இங்கிலாந்தில் வாழ்ந்தும் பெற்ற அனுபவங்களையும் இணைத்து, சிறீகுகன் பல விடயங்களை ஒருங்கிணைத்துப் பார்த்து, தொகுத்து விடயங்களை இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தார். அக்காலம் எம்மில் பலர் ஒரு அப்பார்ட்மென்ட் எடுக்க முடியாமல் இருந்ததற்கும், நல்ல தொழில்வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கும், systemic discrimination தான் காரணம், அவற்றிற்கும் இந்நாட்டிலும் அரசியல் அணுகுமுறைகள்தான் வழியென அறிந்திராத காலம் அல்லது அறிய முற்படாத காலமென்றும் கூறலாம்.

அவையெல்லாம் சிறீக்கு நன்கு புரிந்திருந்தது. இது போன்றவை அனைத்து ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கும் பொதுவானது என்பதையும் தெரிந்திருந்தார். Urban Alliance Race relations(UARR) எனும் தன்னார்வ நிறுவனம், கனடா வாழ் ஜப்பானிய மக்கள். கறுப்பின மக்களென பல்வேறு சிறுபான்மையினங்களும் இணைந்து இயங்கியது. அதில் அவர் அங்கத்தவராக நெடுங்காலமாக, மிகுந்த ஈடுபாடாக செயற்பட்டு வந்தார். அந்த நிறுவனத்தின் அங்கத்துவ மக்களின் சார்பாக Policing சம்பந்தமான பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிறுவனத்தில் தர்மா என அழைக்கப்பட்ட இந்தியத் தமிழரான Audi தர்மலிங்கம் அங்கத்தவராக இருந்தார். இவர்கள் இருவரும் இணைபிரியாத் தோழர் போல இந்நிறுவனம் சார்பான வேலைகளில் ஈடுபட்டனர். சிறீயின் அயராத உழைப்பிற்காக இந்த நிறுவனம் 1994 இல் Dr.Wilson Award எனும் கௌரவமிக்க பரிசிலை வழங்கியது.

1994, 95 களில் ஒன்ராறியோ NDP அரசில் Ontario Human Rights and Pay Equity Tribunal இல் Vice Chair ஆக பதவியேற்று கடமையாற்றினார். இந்த Tribunal இன் செயற்பாடு, மனித உரிமைகள் மட்டுமல்லாது, உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது போன்ற முறைப்பாடுகளைக் கேட்டு, தீரவிசாரித்து நீதி வழங்கலாகும்.Pay Equity தனி நபர், ஒரு குழு ஆகியோருக்கும் பொருந்தும்.

சிறீகுகனால் இவ்வாறான அருமை, பெருமையான பதவிகளையெல்லாம் ஏற்று சேவையாற்றக் கூடியதாக இருந்தது, அவரது அறிவு, அனுபவம், ஆற்றல் என்பதற்கும் மேலாக அவரது ஆங்கில மொழிப்புலமையும் பெரும்பங்காற்றியது எனலாம்.

Ontario Council of Agencies Serving Immigrants, OCASI என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுவனம் 2014 இல் Lifetime Award ஒன்றினை வழங்கியுள்ளனர்.

Ontario அரசு 20 வருடங்களுக்கு மேலான Volunteer service க்கான பரிசிலை 2000 ஆண்டளவில் வழங்கியது. அவரது பங்களிப்புகள், சமூகநலன் கருதிய செயற்பாடுகள் எனக் கூறிக் கொண்டே போகலாம்.

சிறீக்கு 2000ம் ஆண்டில் NDP கட்சியினால் வழங்கப்பட்ட J.S.Woodsworth எனும் மனித உரிமைகள் சார்பான செயற்படுகளுக்கான பரிசிலுக்கு அவரைப் பரிந்துரைத்து விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவரது அனுபவங்கள் அத்தனையையும் தொகுப்பதென்பது பகீரதப் பிரயத்தனமாக இருந்தது. இக்கட்டுரையை வரைவதற்கு தயார் செய்ததும் அதுபோன்ற அனுபவமாகவே இருந்தது எனலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், இன்றுவரையான அனுபவத்தினால் எவற்றை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கற்றுக் கொண்டதாலும், ஓரளவு சமாளிக்க முடிகிறது. அதற்கும் சிறீயின் கடந்தகால அறிவூட்டலும் நிச்சயமாக உதவியாக இருந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

அவரது தனிப்பட்ட குணாதிசியங்கள் சிலவற்றைப் கூறுவதும் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிறீ எதைக் கேட்டாலும் சிறியதோ, பெரியதோ, இலகுவானதோ, சிக்கலானதோ மறுக்காமல் உதவ முன்வருவார். விடயத்தைக் கேட்டு தன்னால் முடியாத விடயமென்றால், அதற்குப் பொருத்தமான ஒருவரை அறிமுகப்படுத்திவிடுவார். தன்னார்வ நிறுவனங்களுக்கான Constitution/by-laws என்பனவற்றைப் பரிசீலித்து, தனது அபிப்பிராயங்கள், திருத்தங்களை தெரிவிப்பது முதல், ஒரு சிறிய கடிதத்தை திருத்தமாக, சரியான விடயங்களுடன் அனுப்புவது வரை தயக்கம் காட்டாது வழிகாட்டியாக இருந்து உதவுவார். கையிலே செல்போனோ, டயரியோ இருக்காது. எதற்காகவேனும் அவரது பிரசன்னத்தை எதிர்பார்த்தால், மூளையில் பதிந்துள்ள டயரியைத் தட்டிப் பார்த்து, முடியும் அல்லது இந்நாள், இந்நேரம் இயலுமாக இருக்கும் என்பார். தனது முக்கிய செயற்பாடு தவிர்ந்த இடங்களிலும் பல வைபவங்களில் மிகவும் சந்தோஷமாகக் கலந்து கொள்வார். அவரது வயதொத்தவர்கள் அல்லாதவருடனும் நல்ல நண்பராகப் பழகுவார். அனைவருடன் சேர்ந்து பகிடிகள் சொல்லி, கேட்டு மனம்விட்டுச் சிரித்து சிறுபிள்ளைகள் போல் பழகுவார். இந்தத் தன்மையே சகலரும் பாகுபாடின்றி சிறீயுடன் பழக ஏதுவாக இருந்தது. அதே நேரம் தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் நடந்தால் மிகவும் கோபப்படுவார். அரசியல் நிலைப்பாடு, வேறுபாடு என முரண்பாடான நிலைகள் இடையிடையே ஏற்பட்டாலும், நாமென்றும் சிறந்த நண்பர்களாகவே இருந்ததற்கு, சிறீயின் வியக்கத்தகும் குணாதிசியங்களே காரணம்.

இத்தனைக்கும் நடுவே அவர் இளம்வயதிலேயே நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர். எங்காவது சந்திப்புகள் நடுவே உணவு உண்ண வேண்டிய தேவை வந்தால், ஒரு இன்சுலின் ஊசியையும் தானாகவே போட்டுக்கொண்டு வந்து இணைந்து கொள்வார். அதையும் மறக்காமல் ஒவ்வொரு நாளும் பொக்கற்றில் எடுத்துக் கொண்டுதான் புறப்பட வேண்டியிருந்தார்.

இவ்வளவு சேவைகளுக்கும், பங்களிப்பும் நடுவே எவ்வாறு தனது குடும்பத்தைக் கவனித்திருப்பாரென பலரும் எண்ணலாம். எந்தவொரு சந்திப்பின் போதும், எந்தவொரு உரையாடல் போதும் அவரது அன்பான மனைவியின் பெயர், Janet ஓ, அவரது ஒரே பாசமுள்ள மகள் பெயர், Arniya வோ வராமல் இருக்காது. அவர் தனது வாழ்க்கையில் ஒருநாளில் பல மணித்தியாலங்களை மற்றவர்களுக்காக, பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தியிருந்தாலும், அவர் தனது குடும்பத்தினருடன் செலவிட சில மணிகளை, சில நாட்களேனும் வைத்திருந்தார் என்றே தெரிந்தது. குடும்பத்தினரும் அவரது சேவையின் ஆர்வத்தினை நன்குபுரிந்து, அதற்கு ஈடுகொடுத்து வாழ்ந்தனர் என்பதையும் புரிந்து கொள்ளலாம். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” எனும் பழமொழி உண்மையாகும் என்பதை, அவரது நன்கு, சிறப்பாக முன்னேறியுள்ள மகள் Arniya வைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

சிறீகுகன் தனது சேவைக்காலத்தில் அதிக எண்ணிக்கையான அறிக்கைகளையும், கட்டுக் கட்டாக file களையும், கத்தை கத்தையாக document களையும், வாசித்திருப்பார், பரிசீலித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அநேகமாக அவைதான் அவரது சொத்துகளாக அவரது வீட்டிலும் நிறைந்திருக்குமெனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர் நோய்வாய்ப்படடிருந்த காலமும், அவரது இழப்பும் அவரது குடும்பத்தினரை மிகவும் பாதித்திருக்கும். அதேவேளை சிறீகுகனின் சிறப்புப்பற்றி தொடர்ந்தும் பேசப்படுவது கொண்டாடப்பட வேண்டியதாகும்.

சிறீகுகனின் இத்தனை செயற்பாடுகளையும் அர்த்தமுள்ளது ஆக்குவதானால், அவர் ஈடுபட்ட ஒவ்வொரு விடயத்தையும் பல்லினம் சார்ந்த இளைய சந்ததியினர் நன்கு கற்று, ஆய்வுகள் செய்து, அவை பற்றிய ஆய்வுக்கட்டுரைகளையும், தமது மேற்படிப்புகளில் Thesis களையும் வெளியிடுதல் வேண்டும். அதற்காக ஒரு புலமைப்பரிசில் நிதியம் கூட ஆரம்பிக்கலாம் என்பது, எனது தாழ்மையான அபிப்பிராயமெனக் கூறிக்கொண்டு, இங்கு சமூகத்தில் மிகச்சிறப்பானவர் ஒருவரை இழந்தது பற்றி துயருறும் போதும், அவர் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தமை பற்றி மகிழ்கிறேன்.

ஜானகி பாலகிருஷ்ணன்