Sri Guggan thaiveedu

துஷி ஞானப்பிரகாசம்

1 min read

சமூகப் போராளி ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராஜா

- துஷி ஞானப்பிரகாசம்

மனித உரிமைகளுக்காகவும், இனச் சமத்துவத்திற்காகவும், இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்காகவும் போராடவெனத் தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்த ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராஜா ஒக்ரோபர் மாதம் ஒன்பதாம் திகதி, 2022-ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமையன்று பூவுலகை நீத்தார். 1942-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியன்று வடஇலங்கையின் தொண்டைமானாற்றிலே பிறந்தவர் ஸ்ரீகுகன். இலங்கையின் முந்நாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் பொன். ஸ்ரீஸ்கந்தராஜாவினதும் அவரின் துணைவியார் கண்மணியினதும் மகனும், காலஞ் சென்ற சட்டத்தரணி சுசீலா தெ. மூர்த்தி, வைத்திய கலாநிதி இந்திரா சிவயோகம், கலாநிதி ஸ்ரீபவன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் சகோதரருமான ஸ்ரீகுகன், தன் அன்புக்குரிய மனைவி ஜெனற், மகள் ஆன்யா ஆகியோரை இவ்வுலகில் விட்டுச்சென்றார்.

1958-ல் தனது பதின்ம வயதில் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான இன வன்முறையை நேரடியாக அனுபவித்தமையே தன்னைப் பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதற்காகவும் குரலற்ற மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவும் தூண்டியது என அவர் பதிவுசெய்துள்ளார். 1962-ல், இலங்கையை விட்டுக் கல்வியின் நிமித்தம் வெளியேறி, இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பை மேற்கொண்ட அவர், 1975-ல் கனடா வந்து இனப்பாகுபாட்டுக்கு எதிரான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தார்.

ஆரம்பத்தில், கனடாவிலிருந்து ஜமேய்க்காவிற்கு நாடுகடத்தப்படவிருந்த அந்நாட்டு இளைஞர்களுக்காக சட்டத்துணைவராகப் பணியாற்றி வந்த அவர், 1977-ல் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான இனவன்முறைகளுக்குப்பின் கனடாவில் தஞ்சம் கோரிய தமிழர்களின் அகதிக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக வாதாட முன்வந்தார். 1962-ல் நாட்டைவிட்டு வெளியேறியதுமுதல் நாட்டோடும் தமிழ் மொழியோடும் பெரிதும் தொடர்பைப் பேணியிராத தான், மணிக்கணக்காக அகதிக் கோரிக்கையாளர்களின் அனுபவங்களைக் கேட்டு மொழிபெயர்க்க உதவிவிட்டு, பின்னர் பல முறைகள் தன் மகிழூந்தில் சென்று தனியாக அமர்ந்து அழுததாக அவர் கூறியுள்ளார். அந்தக் கண்ணீருக்குக் காரணம் தன் மக்களோடும் மொழியோடும் தான் பரீட்சயத்தை இழந்துவிட்டேனே என்ற விரக்தியும், அந்த மக்கள் தங்களுக்கு நடந்ததாகச் சொல்லக்கேட்ட கொடுமைகளுமே.

இதுவே அவரை 1978-லே, வேறு பலருடன் இணைந்து கனடா தமிழீழச் சங்கம் என்ற புதிய குடிவரவாளர்களுக்கான வளத்துணை அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராகவும் பணியாற்றத் தூண்டியது. அது முதல் கனடாவிற்கு புதிய குடிவரவாளர்களாய் இருந்த கரிபிய சமூகம், கறுப்பின சமூகம் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்களுடன் மட்டுமன்றி தமிழ்ச் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பைப்பேணி அளப்பரிய சேவைகளை ஆற்றி வந்தார். 1980-லே கனடிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளுக்கான சபையின் அகதிகள் பிரிவின் அங்கத்தவராக ஸ்ரீகுகன் நியமனம் பெற்றார். அப்போது தமிழர்களின் அகதி விண்ணப்பங்களில் 5 விழுக்காடானவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் நிலையே நிலவியது. அதை 1984 அளவிலே 75 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்த்தியதிலே அவரின் பங்கு முக்கியமானது. 1986-லே 155 தமிழ் அகதிகள் நியுபௌண்ட்லாந்துக் கரையை வந்தடைந்த போது, அவர்களுக்கான சமூக ஆதரவைத் திரட்ட ஸ்ரீகுகன் பெரும்பங்காற்றினார். புதிய குடிவரவாளர்களிற்காக அவராற்றிய சேவைகளின் தொடர்ச்சியாக குடிவரவாளர்களுக்குச் சேவையாற்றும் ஒன்ராறியோ அமைப்புகளின் சம்மேளனத்தின் (Ontario Council of Agencies Serving Immigrants - OCASI) இயக்குனர் சபை அங்கத்தவராகவும், ரொறன்ரோ அகதிகள் விடயங்களுக்கான சபையின் (Toronto Refugee Affairs Council) உப-தலைவராகவும் பணியாற்றினார்.

கனடிய பேரொழுக்குச் சமூகத்திலே விளிம்புநிலையிலேயிருந்த புதிய குடிவரவாளர் சமூகங்களினிடையே நிலவிவந்த ஒருவருக்கொருவர் மீதான நம்பிக்கையீனத்தையும் மோதல்நிலையையும் கண்டு அவை அச்சமூகங்களின் வளர்ச்சிக்குப் பங்கம் விளைக்கும் என்பதை உணர்ந்து, அந்நிலையை மாற்ற தனது வாழ்வின் முப்பதாண்டுகளுக்கும் மேலான பகுதியை அர்ப்பணித்தவர் ஸ்ரீகுகன். இந்த நோக்கோடு, ஒன்ராறியோ மனித உரிமைகள் சபையின் (Ontario Human Rights Council) உப தலைவராகவும், நியாயமான ஊதிய வழங்கலுக்கான தீர்பாயங்களின் (Pay Equity Tribunals) அங்கத்தவராகவும், ஒன்ராறியோவின் குற்றவியல் நீதிக் கட்டமைப்பிலே கட்டமைப்பு ரீதியான இனக்காழ்ப்பை ஆராயும் ஆணையகத்தின் (Commission of Systematic Racism in the Ontario Criminal Justice System) ஆணையாளராகவும் தொண்டாற்றியுள்ளார். அத்தோடு உலகளாவிய ஆபிரிக்க முன்னேற்றச் சங்கம் (Universal African Improvement Association) மற்றும் கறுப்பின வளத்துணைத் தகவல் மையம் (Black Resource Information Centre) ஆகிய கறுப்பின மக்களின் நலம்பேண் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். நகரில்வாழும் பல்வேறு சமூகங்களிடையேயும் நல்லுறவைப் பேணும் இன உறவுக்கான நகர் சார் கூட்டமைப்பு (Urban Alliance on Race Relations - UARR) என்ற அமைப்பின் இடைக்கால இயக்குனராக சில காலம் தொண்டாற்றியதோடு அதன் தன்னார்வ இயக்குனர்கள் சபையிலும் பல காலம் பங்காற்றினார். புதிய குடிவரவுச் சமூகங்களுக்கும் நகரக்காவற் படைகளுக்கும் இடையே புரிந்துணர்வற்ற தன்மையும் முறுகல் நிலையும் தொடர்வதை மாற்றவும் ஸ்ரீகுகன் உழைத்தார். நகர் சார் பல்பண்பாட்டு, பல்லின சமூகங்களுக்கான காவலை வழங்குவதுபற்றியதான ரொறன்ரோ பெரும்பாகச் செயற்பாட்டுக் குழு (Greater Toronto Working Group on Policing Multi-Cultural and Multi-Ethnic Urban Communities) என்ற அமைப்பை நிறுவியதோடு அதன் அங்கத்தவராகவும் பலகாலம் தொடர்ந்தார்.

1990-களின் நடுப்பகுதியிலே, ரொறன்ரோ பெரும்பாகத்திலே தமிழ் பாடசாலை மாணவர்களிடையே குழுநிலை மோதல்களும், குற்றச்செயல்களும் பரவி, அவர்களைத் தீயசக்திகள் தமக்கான ஆதாயம்பெறப் பயன்படுத்தும் செயல்கள் பரவிவந்தது. அதன் விளைவாக பதின்ம வயதுத் தமிழ் இளையோர் கொல்லப்படுவதும் கைதுசெய்யப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாயின. அந்த நிலையைத் தடுத்து, அந்த இளையோருக்கான வழிகாட்டிகளாருமற்ற வெற்றிடத்தை நிரப்பவென கனடிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுக்கொண்டும், புதிதாகப் பட்டம்பெற்றும் இருந்த இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி ஒரு அமைப்பு ரீதியாக இயங்க முற்பட்டு கனடிய தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் (Canadian Tamil Youth Development Centre - CanTYD) என்ற அமைப்பை 1998-லே உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்ததோடு, தொடர்ந்தும் பல்லாண்டுகளாக அதனுடன் இணைந்தும் செயற்பட்டவர் ஸ்ரீகுகன். இளையோரை வலுப்படுத்தலும் அவர்களை வளப்படுத்தலும் ஒரு சமூகத்தின் வளமான இருப்புக்கு இன்றியமையாதது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் ஸ்ரீகுகன். இதுவே அவரைக் CanTYD அமைப்புடன் மட்டுமன்றி John Brooks Community Foundation and Scholarship Fund போன்ற பேரொழுக்கு நிறுவனங்களு டனும் தொடர்ந்து பணியாற்றத் தூண்டியது.

எனக்கு அவர் அறிமுகமானது CanTYD மூலமாகத்தான். பதின்ம வயதுப் பாடசாலை மாணவர்கள் முதல் இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த புதிய பட்டதாரிகள்வரை கூடியிருந்த இடத்திலே நரைத்த தலையுடனும், மாறாத புன்னகையுடனும், நேர்த்தியான உடையுடனும் அவரும் எப்போதும்கூட இருப்பார். எம் அனைவருக்குமே அவர் தந்தையையொத்த வயதுடையவராகவோ, அதைவிட மூத்தவராகவோ இருந்தபோதும், அனைவரும் அவரை ‘அண்ணா’ என்றே அழைத்தோம். அதன் காரணம் அவர் ஒரு தந்தைக்குரிய அதிகாரத்தோடும் அந்நியத்தன்மையோடும் எம்மோடு ஒருபோதும் பழகியதில்லை. மாறாக, ஒரு சசோதரனுக்குரிய அக்கறையோடும், ஆதரவோடும், தோழமையோடும் மட்டுமே பழகினார். ஒரு சந்தர்ப்பத்திற்கூட அவர் தனது வயதையும் அனுபவத்தையும் காரணம்காட்டித் தன் முடிவை ஏனையோர் மீது திணித்தாரில்லை. அலசப்படும் எந்தவொரு விடயம் பற்றியும் தனது கருத்தைக் கூறி விட்டு, இறுதியில் ‘எப்படியிருப்பினும் இது எனது கருத்து மட்டுமே. இதுவே சரியான கருத்து என்று அர்த்தமில்லை’ என்று ஆங்கிலத்திற்கூறி முடிப்பார். அவர் தனது பெயரை ஆங்கிலத்திலே எழுதும்போது Sri-Guggan Sri-Skanda-Rajah என்று பிரித்தே எழுதுவார். ஏன் உங்கள் பெயரை இப்படி விநோதமாக எழுதுகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர் ‘நான் இலங்கையைவிட்டு வெளிநாட்டுக்கு வந்தபோது வேற்றுச் சமூகத்தவர்களும், வேற்று மொழியினரும் என் நீண்ட பெயரைப் பார்த்துப் பயந்துபோனார்கள். அதை உச்சரிக்க முயற்சி செய்யவே மறுத்தார்கள். அவர்களுக்காக என் பெயரைச் சுருக்கிக்கொள்ளவோ அதன் அர்த்தம் கெடும் வகையில் சிதைத்துக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு இலகுவான முறையில், அதே நேரம் என் பெயர் சிதைவுறாத வகையில் இப்படி எழுத ஆரம்பித்தேன். அதையே இன்றுவரை தொடர்கிறேன்’ என தனக்கேயுரிய புன்முறுவலுடன் விளக்கினார். எங்கள் தனித்துவமான அடையாளங்களைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றியும், எங்கும் எப்போதும் எவ்வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் துணிந்து குரல் எழுப்ப வேண்டியதன் அவசியம் பற்றியும் அவரிடம் நாம் கற்றுக்கொண்டவைகள் ஏராளம். CanTYD அமைப்பிலே பதின்ம வயதுப் பாடசலை மாணவர்களாக இருந்தவர்கள் பலருடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்தி தனது இறுதிக்காலம்வரை அந்த உறவுகளைப் பேணி வந்தார். அந்த இளையோரின் சட்டச்சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்குவதிலிருந்து அவர்களின் காதல் பிரச்சினைகளுக்கு செவிமடுப்பதுவரை அவர்களுக்கான அவரின் சேவை அகன்று பரந்தது.

ஸ்ரீகுகன் அவர்கள் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வாழ்ந்தவர். விருதுகளையோ அங்கீகரங்களையோ நோக்கித் தன் பணியை அவர் செய்தாரில்லை. இருந்தபோதும், அவரின் நீண்டகன்ற பணிவாழ்வில் சில விருதுகளும் அங்கீகாரங்களும் அவரைத் தேடிவந்து கௌரவம் பெற்றுக்கொண்டன. அவற்றிலே OCASI அமைப்பால் 2014-லே வழங்கப்பட்ட ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும், CanTYD அமைப்பால் 2012-லே வழங்கப்பட்ட ‘அர்ப்பணிப்பின் வாழ்வு’ விருதும், UARR அமைப்பால் 2014-லே வழங்கப்பட்ட ‘டாக்டர் வில்சன் ஹெட்’ விருதும், அவர் பெரிதும் நேசித்த, மிகவும் உழைத்த அமைப்புகளால் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் என்ற வகையிலே முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றைவிடவும், ஒன்ராறியோ அரசின் இருபதாண்டுகாலத் தன்னார்வத் தொண்டருக்கான விருது, ஒன்ராறியோ புதிய சனநாயகக் கட்சியின் ஜே.எஸ். வூட்ஸ்வேர்த் விருது என்பனவும் 2000ம் ஆண்டிலே அவருக்கு வழங்கப்பட்டன.

ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராஜா விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் நிரப்பமுடியாதது. எனினும், அவர் ஊக்குவித்த, அவரின் பணிவாழ்வால் உந்தப்பெற்ற, அவரை முன்மாதிரியாக வரித்துக்கொண்ட இளையோர் பலர் இன்று கனடாவின் பல்வேறு மட்டங்களிலும் தலைவர்களாகவும், பொதுத்தொண்டாளர்களாக ஆகியுள்ளமை, அவரின் பின்னும் அவரின் பணி தொடரும் என்பதையே சுட்டுகின்றது.

- தாய்வீடு, நவம்பர் 2022 இலத்திரன் பதிப்பில் பிரசுரமான கட்டுரையின் பிரதி.