Sri Guggan thaiveedu

ஹரி ஆனந்தசங்கரி

1 min read

ஸ்ரீகுகனின் பணி தொடரும்! புகழ் வாழும்!

- ஹரி ஆனந்தசங்கரி

கடந்த மாதம் தமிழ்க் கனடிய சமூகம் எமது மூதோரில் ஒருவரை இழந்துள்ளோம் - ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராஜா.

ஸ்ரீ அண்ணா என அன்போடு அழைக்கப்பட்ட அவர் நாலு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகத்திற்கு ஆதரவு வழங்கியும்; வலுவூட்டியும் அத்தியாவசியமான சேவை வழங்கினார். ஸ்ரீ அண்ணா முதலில் 1970-களின் பிற்பகுதியில் கனடா தமிழீழச்சங்கத்தின் அங்கத்தவராக பணியை முன்னெடுத்தார். பின்னர் கறுப்பு ஜூலை யின்பின், பெருந்தொகையான தமிழர்கள் கனடாவில் தஞ்சங்கோர ஆரம்பிக்க, அந்தப் புதியவர்களுக்கு ஆதரவு வழங்கவும் அவர்களைக் குடியமர்த்தவுமென அவர் அயராது உழைத்தார். 1983-இலே சிறப்பு நடவடிக்கைகள் செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டு அதன்மூலம் 1,800 தமிழர்கள் கனடாவிலே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு ஸ்ரீ அண்ணாவினதும் அவருடன் இணைந்து கனடா தமிழீழச் சங்கம் என்ற ஒற்றைக் குடையின்கீழ் செயற்பட்ட வேறுபல தமிழ்ச் செயற்பாட்டாளர்களினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பரிந்துரைச் செயற்பாடே காரணம்.

தமிழ் அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களுக்கும் உதவிகளை வழங்கிவந்த போதிலும், இலங்கையின் வடக்குக் கிழக்கிலே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஸ்ரீ அண்ணா திட்டவட்டமாக ஆதரித்தார். 1950-களிலே இலங்கையில் ஓர் இளையவனாக தான் முகங்கொடுக்க நேர்ந்த விடயங்களையும், பல இளந்தமிழர்களை நாட்டைவிட்டு வெளியேறத்தூண்டிய 1956இன் முதலாவது தமிழர்களுக்கெதிரான வன்முறையின் தாக்கங்களையும் அடிக்கடி நினைவு கூர்வார். தனது மக்கள் மீதான அன்பையும், ஓர் ஒடுக்குமுறை அரசிடமிருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டியதன் தேவையையும் தனது வாழ்வின் பணிக்கான தார்மீக வழிகாட்டியாக வரித்தவர் அவர்.

கனடாவிலே 1970-களிலும் 80-களிலும் கறுப்பின மக்களுக்கெதிராக இனக்காழ்ப்பை எதிர்க்கும் இயக்கங்கள் உருவானபோது அவற்றினூடாக, ஓர் அரசு தனது சிறுபான்மைகளை எவ்வாறெல்லாம் ஒடுக்குகிறது என்பதில் பல ஒற்றுமைகளைக் கண்டார். அங்கே, தனது பணியை முன்னெடுப்பதற்கான வெளியையும் உணர்வுத் தோழமையையும் கண்டடைந்தார். ரொறன்ரோ காவற்படையின் கரங்களால் கொல்லப்பட்ட பல கறுப்பின இளைஞர்களிற்கு நீதிகோரி டட்லி லோவ்ஸ் போன்ற தலைவர்கள் பேரணி சென்ற போது, ஸ்ரீ அண்ணாவும் உடனிருந்தார். காவற்படையினரிடமிருந்து அவர் பொறுப்புக்கூறலை வேண்டினார். பேரணி செல்வதோடு நிறுத்திவிடாமல், இந்த முடிவுகள் எடுக்கப்படும் அவையிலே பாதிக்கப்பட்டவர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

1990-களின் பிற்பகுதியிலே கனடாவிலே தமிழர் மீதான தமிழரின் வன்முறைகள் கட்டின்றிப்பெருக, அப்போது வயதில் முதிர்ந்திருந்த ஸ்ரீ அண்ணா முன்வந்து கனடிய தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் (CanTYD) என்ற பெயருடன் உருவாகிக்கொண்டிருந்த ஒரு புதிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படச் சம்மதித்தார். பல்வேறு துறைகளிலும் அவரின் வாழ்நாள் பங்களிப்புகளுக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், CanTYD அமைப்புடன் இணைந்து அவர் ஆற்றிய பணியே அவருக்கு மிகவும் ஆத்ம திருப்தி அளித்தது என்றே நான் எண்ணுகிறேன். CanTYDலே அவரின் வெவ்வேறு உலகங்கள் ஒரு புள்ளியில் சந்திப்பதைக் கண்டார். அங்கே, அடுத்த தலைமுறையை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான தாகம் தீர்ந்தது. வாழ்நாள் பூராகவும் சேமித்த அறிவையும் அனுபவத்தையும் கடத்துவதற்கான வல்லமை கிடைத்தது. மக்களை ஒன்றிணைத்து கட்டமைப்புகளுக்குச் சவால் விட்டு, சமுகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை பூர்த்தியானது. இளையோருடன் அளவளாவி தனது அறிவையும் அனுபவத்தையும் அவர்களுக்கு ஊட்டுவதிலே மணிக்கணக்காகச் செலவிடுவார் அவர்.

CanTYD மீதும் தமிழ் இளையோரின் மீதுமான அவரின் தாக்கமே அவர் விட்டுச்சென்றுள்ள பெருங்கொடையும் கனடாவிற்கான அவரின் மிகப்பெரிய பங்களிப்புமாகும்.

இனக்காழ்ப்புக்கு எதிரான செயற்பாட்டாளராகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டாளராகவும், அகதிகளுக்கான பரிந்துரைஞராகவும், மக்களுக்கு - குறிப்பாக இளையோருக்கு - வலுவூட்டுபவராகவும் அவர் வாழ்நாளில் ஆற்றிய பல பணிகள் கனடியர்களின் வாழ்வையும் இதயத்தையும் தொட்டுள்ளது. அவரின் பிரிவால் தவிக்கும் அதேவேளை அவர் தடம்பதித்த அமைப்புகள் ஊடாகவும் தொட்டுச்சென்ற மனிதர்கள் ஊடாகவும் அவரின் புகழும் பணியும் தொடரும் என்பதை அறிவோம்.

- தாய்வீடு, நவம்பர் 2022 இலத்திரன் பதிப்பில் பிரசுரமான கட்டுரையின் பிரதி.