V.M.Parameswaran's article

1/9/20241 min read

உண்மையும் நேர்மையும் கொண்ட மனிதாபிமானி ஸ்ரீகுகன்

கனடிய மண்ணில் மூத்த தமிழ்க்குடிமகனாக வாழ்ந்தவரும் தமிழ்சமூகத்தின் மீது கொண்ட அதீத பற்றுக்காரணமாக புலம்பெயர் கனடியத்தமிழ் சமூகத்திற்கு தன்னால் முடிந்தளவு பங்களிப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொண்ட ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 07 ஒக்டோபர் 2022 கனடாவில் காலமானார்.

அமரர் ஸ்ரீகுகன் அவர்களை 1983ம் ஆண்டிலிருந்து நான் அறிவேன். 1982 பிற்பகுதியில் அல்லது 1983 முற்பகுதியில் இலங்கைத்தமிழர்களாகிய நாம் அகதிகளாக கனடிய மண்ணிற்கு புலம்பெயர்ந்த போது தன்னுடைய இனத்தவன் என்ற ஒரேயொரு காரணத்திற்காக எங்களைத் தேடிவந்து அனைத்துவகையிலும் அறிவுரைகளை வழங்கியவர்களில் மிக முக்கியமானவராகத் திகழ்ந்தவர் அண்ணர் ஸ்ரீகுகன் அவர்கள்.

1983களில் இங்கு இருந்த தமிழீழச்சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். ஜூலை இனக்கலவரம் ஆரம்பமாவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் திருமலை, வவுனியா போன்ற தமிழ் எல்லைக்கிராமங்கள் திட்டமிட்ட வகையில் அரச படைகளாலும், காடையர்களாலும் தீக்கிரையாக்கப்பட்ட போது அந்த சம்பவத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்காக கனடாவில் ஒட்டாவாவில் முதன்முதலாக ஓர் ஆர்ப்பாட்டப்பேரணி நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கி முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஸ்ரீ அண்ணர் அவர்கள்.

ஓப்பீட்டளவில் குறைந்த தொகையினராக இருந்த போதிலும் கனடியத் தேசியப்பத்திரிகைகளான ரொறன்ரோ ஸ்ரார், குளோப் அன்ட் மெயில் போன்றவை முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. அதற்குக் காரணமாகவும், பொறுப்பாகவும் இருந்தவர் மதிப்பிற்குரிய திரு. அருளையா அவர்கள் ஆகும்.

துரடல இனக்கலவரத்திற்குப் பின்னர் நடைபெற்ற அரசியல்ரீதியான போராட்டங்கள் அனைத்திலும் ஸ்ரீகுகன் அவர்களது பங்களிப்பு நிறைந்திருந்தது. இக்காலகட்டத்தில் அகதி விண்ணப்பம் கோருபவர்களுக்கு தன்னால் முடிந்தளவு சட்ட உதவிகளையும், வழித்துணை உதவிகளையும் தரம் தராதரம் பார்க்காது செய்த ஒரு பெருமகன் அவர்.

கனடிய குடிவரவுத் திணைக்களத்தில் அகதிகள் விசாரணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த போது எந்தவொரு அகதி அந்தஸ்து கோரிய தமிழனையும் நிராகரித்தது கிடையாது. இலங்கைத்தமிழன் அங்கு இருக்க முடியாது இங்கு வருகின்றான், மன உளைச்சல், மனவிரக்தி காரணமாக அவனால் சரியாக விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் நீதியை வழங்கியவர் அண்ணர் ஸ்ரீ அவர்கள்.

கொழும்பு சூழலில் பிறந்து வளர்ந்து உயர் கௌரவத்துடன் வாழ்ந்த போதிலும் தமிழ் இனப்பற்றும், தமிழ்த்தேசியப் பற்றும் கொண்டவராக விளங்கிய ஸ்ரீ அண்ணர் அவர்கள் தமிழ் சைவ உணவை மிகவும் ருசித்து சாப்பிடுவார். குறிப்பாக 1983, 1984 களில் தமிழ் உணவகங்களோ, கடைகளோ இல்லாத காலங்களில் எங்கள் தங்குமிட அறைக்கு அல்லது ஆனந்தன், சிவா, ஈசன் (சண்லைவ் ) போன்றவர்களின் தங்குமிட அறைக்கு வரப்போகிறார் என்றால் தொலைபேசியில் சொல்லுவார் இன்றைக்கு எனக்கு யாழ்ப்பாணத்து பருப்புக்கறியும், தக்காளிப்பழ சொதியும் தர வேண்டும் என ஓர் குழந்தையைப் போன்று கேட்பார். எந்த நிலையிலும் பெருமையில்லாது வாழ்ந்த மானிடன் அவர்.

அன்னார் இலங்கையில் புகழீட்டிய பிரதம நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களது மகனாவார். தனது வாழ்வின் பெரும்பகுதியை இனத்திற்காக உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றிய ஸ்ரீ அண்ணர் நன்றியுணர்வுள்ள தமிழர் கனடாவில் வாழும்வரை வாழ்வார்.

மரணம் பலரைப் புதைக்கின்றது. சிலரை விதைக்கின்றது. ஸ்ரீ அண்ணர் விதைக்கப்பட்டார். இந்த மண்ணில் அவரது பெயர் நிலைத்து வளரும்.

வ.மு.பரமேஸ்வரன் - ஆசிரியர் ஈழநாடு